நாகர்கோவில்-கோவை ரயிலில் இரும்பு கொக்கிகள் அறுந்ததால் படுக்கை பலகை விழுந்து, சிறுவன்பலத்த காயமடைந்தார்.
கோவை அண்ணா ஆசிரியர் காலனியைச் சேர்ந்த மேத்யூ மனைவி புவிதா(29). அங்குள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார். இரு தினங்களுக்கு முன்புசொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து விட்டு, பின்னர் தனது 4 வயது மகன் ஜாய்சன் தாமஸுடன் கோவை செல்வதற்காக நேற்று முன்தினம் வாஞ்சி மணியாச்சி நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-7 முன்பதிவுப் பெட்டியில் இரவு 11.40 மணிக்கு புவிதா மகனை கீழடுக்கில் படுக்க வைத்துவிட்டு, அவருக்கான படுக்கையை தயார் செய்தபோது, திடீரென மேலடுக்கு படுக்கையைத் தாங்கிப் பிடிக்கும் இரு இரும்புக் கொக்கிகள் அறுந்து விழுந்தன. இதில் கீழே படுத்திருந்த புவிதா மகனின் நெற்றியில் படுக்கைப் பலகை விழுந்து, பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே பணியில் இருந்தபயணச்சீட்டு பரிசோதகரிடம் புவிதா புகார் செய்தார். அவர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். விருதுநகர் ரயில் நிலையத்தில் சுகாதாரப் பிரிவு ஊழியர் ஒருவர் முதலுதவி அளித்தார். மதுரை ரயில் நிலையத்தில் மருத்துவக் குழுவினர் தயாராக இருப்பர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அங்கு யாரும் இல்லை. இதையடுத்து, அதிகாலையில் ரயிலில் இருந்து இறங்கிய புவிதா, ஆட்டோ மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு மகனை சேர்த்தார்.
இதுகுறித்து புவிதா கூறியதாவது: மதுரை ரயில் நிலையத்தில் சிகிச்சையளிக்க யாருமே இல்லை. இதனால், நானே தனி ஆளாக வாடகை ஆட்டோவில் சென்று, மதுரை அரசு மருத்துவமனையில் மகனை சேர்த்தேன். படுகாயமடைந்து 3 மணி நேரத்துக்குப் பிறகே, மகனுக்கு சிகிச்சை கிடைத்தது. இதற்கு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்.
இது தொடர்பாக மதுரைரயில்வே போலீஸில் புகார் தெரிவித்தேன். கோவை சென்று, ரயில்வே மற்றும் காவல் துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க உள்ளேன்.ரயில்வே அதிகாரிகள் சிலர் என்னைத் தொடர்புகொண்டு, உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்" என்றார்
கருத்துரையிடுக