குளச்சலில் திருட்டு பைக்கை ஓட்டி வந்தவர் விபத்தில் சிக்கி கைது



கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே நெடியாங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி.

 இவரது மகன் சுரேஷ் குமார்(38). சம்பவத்தன்று இவர் குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சைமன்காலனி பாலம் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் ஒன்று அதிவேகமாக சுரேஷ் குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். 

அதில் சுரேஷ் குமார் மீட்கப்பட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

மற்றொரு பைக்கில் வந்த படுகாயமடைந்த வாலிபரும் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சுரேஷ்குமார் குளச்சல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

 இதனடிப்படையில் படுகாயமடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வாலிபரின் பெயர் விஜயன்(36) என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது.


இவர் சம்பவத்தன்று காலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருந்து பைக்கை நைசாக திருடிவிட்டு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து விஜயன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட பைக் யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை