குளச்சலில் அரசு பஸ்சில் கண்ணாடி உடைப்பு


கன்னியாகுமரி மாவட்டம்  களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ்(50). இவர் நாகர்கோவில் செட்டிக்குளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை இவர்  நாகர்கோவிலிருந்து முள்ளூர்த்துறை செல்லும் பஸ்சை ஓட்டினார். 


பஸ் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பை கடந்து செல்லும்போது அங்கு சுற்றித்திரிந்த மனநோயாளி ஒருவர் திடீரென ஒரு கல்லை எடுத்து பஸ்சின் பின் பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் கண்ணாடி உடைந்து சாலையில் சிதறி விழுந்தது.

 அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பஸ் டிரைவர் கிருஷ்ணதாஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் மனநோயாளியை பிடித்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனநோயாளி எந்த ஊர், பெயர் என்று தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை