இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ரொமான்டிக் காமெடி படமான இதன் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், எல்.ஐ.சி படத் தலைப்பைப் பயன்படுத்த, இயக்குநரும் இசை அமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்ததலைப்பை 2015-ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் சார்பில் பதிவு செய்துள்ளேன். இதை அறிந்த விக்னேஷ் சிவன், தன் படத்துக்கு அந்தப் பெயரை தரக்கோரிதனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.
ஆனால் என் படத்தின் கதைக்கு அது முக்கியம் என்பதால் மறுத்து விட்டேன். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்துக்கு வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயல். இது முழுக்க அதிகாரத்தன்மை கொண்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். தொடர்ந்து அவர் அந்த தலைப்பைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்றார்
கருத்துரையிடுக