கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்துக் கொண்டே சென்றது. குறிப்பாக மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாகனங்கள் திருட்டு தொடர்ந்து வந்தது.
இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் குமரி - கேரளா எல்லை சோதனை சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களை சிசிடிவி காட்சிகளின் ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை பிடிக்க கேரளா விரைந்தனர். அங்கே முகாமிட்டு போலீசார் நடத்திய விசாரணையில், வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் திருவனந்தபுரம், அயிர பகுதி ஜியோ (19) , அதே பகுதி விஷ்ணு ( 19) மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஐந்து பேர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் போலீசார் மீட்டனர். இந்த வாகன திருட்டு தொடர்பாக மேலும் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தனிப்படையினருக்கு தெரிய வந்தது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துரையிடுக