உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசனை யொட்டியும் வருகை அதிகமாக இருக்கும். தற்போது சீசன் இல்லாத இந்த நேரத்திலும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இருப்பினும் நாளொன்றுக்கு சராசரி 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடைபடுகிறது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை. இதனால் அதிகாலை வேளையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும், மாலை வேளையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிட்டது.
கருத்துரையிடுக