பொன்னியின் செல்வன்' Vs ‘பாகுபலி’ : ட்விட்டரில் மீண்டும் மோதிக்கொள்ளும் தமிழ் - தெலுங்கு ரசிகர்கள்


மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்குப் பரவலான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இந்தப் படத்தை முன்வைத்து தமிழ் சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா ரசிகர்களும் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வ’னைப் பல ஆண்டுகால முயற்சிக்குப் பின்னர் திரைவடிவமாகக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்த நாவலைத் திரைப்படமாக எடுக்க எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை பலரும் முயற்சி செய்து சாத்தியமாகாத நிலையில், இன்றைய ரசிகர்கள் வரவேற்கும் வகையில் இந்தப் படத்தை அவர் எடுத்திருப்பதாகப் பாராட்டப்படுகிறது.

இந்நிலையில், ’பாகுபலி’ படத்தை முன்வைத்து தெலுங்கு சினிமா ரசிகர்கள், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ட்விட்டரில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குத் தமிழ் சினிமா ரசிகர்களும் தகுந்த பதிலடி கொடுத்துவருகிறார்கள்

பொன்னியின் செல்வன்’ படத்தின் டீஸர் வெளியானது முதலே இந்த மோதல் தொடங்கிவிட்டது. பிரம்மாண்டமான செட், பிரமிக்கவைக்கும் விஷூவல் எஃபெக்ட்ஸ் என காட்சிப்பூர்வமான கலைபடைப்பாக எடுக்கப்பட்ட ‘பாகுபலி’ திரைப்படம், பல மொழிகளில் கொண்டாடப்பட்டது. ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ டீஸரில் ‘பாகுபலி’க்கு நிகரான விஷூவல் எஃபெக்ட்ஸ் இல்லாததாகக் கூறி தெலுங்கு சினிமா ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். ஆனால், ‘பாகுபலி’ ஒரு கற்பனைக் கதை என்றும், ’பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினம் என்றும் விளக்கம் சொன்ன தமிழ் ரசிகர்கள், ‘பாகுபலி’ படத்தின் பல காட்சிகள் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் தாக்கத்தில் உருவானவை என்றும் சுட்டிக்காட்டினர்.


ஏற்கெனவே, பான் இந்தியா திரைப்படங்கள் மூலம் தென்னிந்தியத் திரைப்படங்கள் பாலிவுட் திரையுலகை வீழ்த்திவிட்டதாக எழுந்த விவாதங்களால் பாலிவுட் Vs தென்னிந்திய சினிமா என்கிற ரீதியில் கருத்து மோதல் ஏற்பட்டது. அது பாலிவுட் ரசிகர்களைத் தாண்டி பாலிவுட் நடிகர்கள் வரை எதிரொலித்தது. அப்போதெல்லாம் தென்னிந்திய சினிமா என மொத்தமாகச் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், தமிழ் Vs தெலுங்கு எனத் தனியே இன்னொரு மோதல் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.


அப்போது ஓரளவு ஓய்ந்திருந்த மோதல், இன்று ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியானதும் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. இந்த முறை தெலுங்கு ரசிகர்கள்தான் என்றில்லை; தமிழ் ரசிகர்களில் சிலரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைப் பாராட்டும் நோக்கில், ‘பாகுபலி’ படத்தை சற்றே மலினப்படுத்தியும் பதிவுகள் எழுதினர். ஹாலிவுட் திரைப்படமான ’லயன் கிங்’கின் காப்பிதான் பாகுபலி என்றும்; சில காட்சிகள் ‘பொன்னியின் செல்வன்’ பாதிப்பில் உருவானவை என்றும் சிலர் விமர்சித்தனர்.


நதி வெள்ளத்தின் நடுவே ராணி சிவகாமி குழந்தை மகேந்திர பாகுபலியை ஒற்றைக் கையால் தூக்கி வைத்திருக்கும் காட்சி தொடங்கி, அமரேந்திர பாகுபலி யானை ஒன்றை அடக்கும் காட்சி வரை பலவற்றுக்கும் ரிஷிமூலம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல்தான் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தை ஒப்பிட ‘பாகுபலி’ சிறந்த படம் அல்ல என்றும் சிலர் கூறினர்.

இதனால் இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ‘பாகுபலி’ எந்தப் பாகுபாடும் இல்லாமல் ரசிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் சில பதிவர்கள், அதையெல்லாம் மறந்துவிட்டு ஏன் தெலுங்கு ரசிகர்கள் இப்படி எதிர்மறையான கருத்துகளைப் பரப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் அனைத்து பாகங்களையும் வாசித்தவர்களை, மணிரத்னத்தின் படம் திருப்திப்படுத்தியிருக்கிறதா எனும் விவாதமும் தொடங்கியிருக்கிறது!

Post a Comment

புதியது பழையவை