வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்ப்பு முகாம்

வாக்காளார் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்ப்பு சிறப்பு முகாமில் குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 43,543 பேர் இணைத்தனர். 

சிறப்பு முகாம் 

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் செம்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் தனித் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் வசதிக்காக நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் ஆர்வத்தோடு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் சென்று ஆதார் எண்ணை இணைத்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலையில் இருந்து மாலை வரை வாக்காளர்கள் வந்து சென்றதை காண முடிந்தது.

 ஒரே நாளில்

அதன்படி நேற்று ஒரே நாளில் 43,543 பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைத்தனர். நேற்று முன்தினம் வரை கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் 1,20,379 பேரும், நாகர்கோவில் தொகுதியில் 1,05,249 பேரும், குளச்சல் தொகுதியில் 96,026 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 99,812 பேரும், விளவங்கோடு தொகுதியில் 97,627 பேரும், கிள்ளியூர் தொகுதியில் 1,04,248 பேரும் என மொத்தம் 6,23,341 பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திருந்தனர். நேற்றுடன் சேர்த்து இதுவரை 6,66,884 பேர் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்



Post a Comment

புதியது பழையவை