தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு


களியக்காவிளை-குழித்துறை வரை தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 கன்னியாகுமரி களியக்காவிளை:

 களியக்காவிளை-குழித்துறை வரை தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 பொதுமக்கள் எதிர்ப்பு

 கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது. இதில் சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 இதையடுத்து குழித்துறை முதல் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் சாலை சீரமைப்பு பணி நடந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் திடீரென தற்காலிக சீரமைப்பு பணி நடைபெறும் இடத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

 அப்போது தற்காலிகமாக சீரமைக்காமல் சாலை அனைத்தையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என கூறியபடி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதனையடுத்து சாலை போடும் பணி நிறுத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களிடம் தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்து வருகிறோம். 

பின்னர் நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையாமல் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

பின்னர் போராட்டக்காரர்களுடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். மேலும் விஜய் வசந்த் எம்.பி., குழித்துறை நகரமன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி, நகர மன்ற துணைத் தலைவர் பிரவீன் ராஜா மற்றும் கவுன்சிலர்களும் சாலையை பார்வையிட்டு அதிகாரிகளிடம் தரமாக சீரமைக்க வலியுறுத்தினர்.


Post a Comment

புதியது பழையவை