குமரியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் 2 பேரை தேடுகிறது தனிப்படை


 மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவரிடம் டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை தாம்பரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதா மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதே போல் குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (55) என்பவரது வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மண்டைக்காடு போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.

ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கல்யாண சுந்தரத்தின் வீட்டில் உள்ள ஒரே ஒரு கேமராவில் குண்டு வீசி விட்டு தப்பும் வாலிபர் உருவம் பதிவாகி உள்ளது. அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். தற்போது 3 வது நாளாக பாரதிய ஜனதா, இந்து இயக்க நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐ.ஜி.அஸ்ரா கர்க் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

 

Post a Comment

புதியது பழையவை