உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் 100 நாட்கள் கொண்டாட்டம் கோவையில் கே.ஜி சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.
நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றி நடைப் போடுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கோவையில் இன்று கே.ஜி சினிமாஸ் திரையரங்கில் விக்ரம் படத்தின் “100 நாட்கள் கொண்டாட்டம்” நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக கே.ஜி சினிமாஸின் ஒரு திரையரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இதில் அவரது ரசிகர்கள் மற்றும் கோவையில் உள்ள வி.ஐ.பிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு பாகமாக, விக்ரம் படத்தின் முக்கிய காட்சிகளும், விசில் பறந்த காட்சிகளும் திரையிடப்பட்டது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, விக்ரம் திரைப்படம் 100ஆவது நாளில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு, புதிய போஸ்டர் ஒன்றே நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு இருந்தார். அதில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
இதைத்தொடர்ந்து படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
கருத்துரையிடுக