நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதற்கு முன்பு வெளியாக வேண்டிய இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்பு தனது சிஷ்யனான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய உயரத்தில் இருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சிறந்த நடிகர்கள் என்று அழைக்கப்படும் அனைவருமே இப்படத்தில் இருந்தனர்.
படத்தின் ஆரம்பத்தில் முகமூடி போட்ட கும்பல் சில அரசு அதிகாரிகளை கொடூரமாக கொலை செய்கின்றனர். போதைப்பொருள்கள் கொண்ட இரண்டு கண்டைனரை போலீசார் கைப்பற்றி அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுகின்றனர். இதனை அடைய வில்லன் கும்பல் ஒருபக்கம் தேடுகிறது, மறுபக்கம் முகமூடி போட்ட கொலைகாரர்கள் யார் என்பதை போலீஸ் தேடுகிறது. இறுதியில் இரண்டையும் கண்டுபிடித்தார்களா என்பதே விக்ரம் படத்தின் ஒன்லைன். விக்ரம் படத்தை கமல்ஹாசன் படம் என்றோ விஜய் சேதுபதி அல்லது பகத் பாசில் படம் என்றும் கூறிவிட முடியாது, மாறாக இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்று ஆணித்தரமாகக் கூறலாம். தான் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் லோகேஷ்
விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்ற நடிப்பு அரக்கர்கள் தாங்கள் யார் என்பதை நிரூபித்துள்ளனர். விக்ரம் படத்தின் முதல் பாதி முழுக்கவே பகத் பாசில் ஸ்கோர் செய்கிறார். கண்ணால் எப்படி மிரட்டுவது என்பதை பகத் பாசிலிடம் கற்றுக் கொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டுகிறார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தனித்துவமாக எழுதப்பட்டுள்ளது, முதலில் அடிவாங்கி பிறகு மீண்டும் அடிக்கும் பொழுது வில்லன் என்றாலும் கைதட்டி அள்ளுகிறார். கைதி படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸை' உருவாக்கியுள்ளார்...🔥
தயாரிப்பு - ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்
வெளியான தேதி - 3 ஜுன் 2022
நேரம் - 2 மணி நேரம் 53 நிமிடம்
ரேட்டிங் - 4/5
கருத்துரையிடுக