கோட்டாற்றுச் சிற்பிகள்...!
கோட்டாறு என்ற ஊர்ப்பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகில் அமைந்துள்ள பகுதியாகும்.
இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, சோழபுரம், கோட்டாறு, நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...
கூடிவாழ்ந்திருப்பதை பொ.பி 16-ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் சில தெரிவிக்கின்றன.
இச்சிற்பிகள் கோட்டாற்றை மையமாகக் கொண்டு அங்கு நிலையாகத் தங்கி,
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, கோயில்களில் கல்வெட்டுப் பொறிக்கும் பணியிலும், கோயில்கள் கட்டும் திருப்பணியிலும்...
ஈடுபட்டிருக்கின்றனர்.
இச்சிற்பிகளின் அருமை அறிந்தவர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று,
தங்களுக்கு வேண்டிய பணிகளை முடித்து, அதற்காக அவர்களுக்கு சிறப்புக்கள் செய்திருக்கின்றனர்.
பொ.பி 16-ம் நூற்றாண்டில் கோட்டாற்றில் வாழ்ந்த சிற்பிகளில் தலைசிறந்தவர்களாக,
'கொம்மண்டை நயினான் முதலி' என்பவரும் 'தம்புரான் குட்டி'
என்பவரும் விளங்கியிருக்கின்றனர்.
கோட்டாற்றில் வாழ்ந்த இச்சிற்பாச்சாரியார்கள் இருவருக்கும் சிற்பப்புரந்தரன் என்ற பட்டப்பெயர் இருந்திருக்கின்றது.
▪︎ கொம்மண்டை நயினான் முதலி:
இவர் பரக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், பொ.பி 1544 கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்படுகின்றார்.
இக்கோயிலில் இவர் செய்த திருப்பணிக்குப் பரிசாக, அக்கோயில் ஸ்ரீகாரியம் செய்கின்றவர்கள் கிழார் மங்கலத்தில் காராண்மைக் காணியாக...
காணி முக்காணி காலே அரைக்காணி அளவுள்ள நிலத்தை அளித்திருக்கின்றனர்.
இது அவர் செய்த பணிக்காக சிற்பவிருத்தி என்ற பெயரில் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இக்கோயிலில் இவருக்கு திருநாள் தோறும் படியும், பரிவட்டமும் கொடுத்து மரியாதை செய்திருக்கின்றனர்.
கல்வெட்டில் இச்சிற்பி,
'கோட்டாறான மும்முடிச் சோழபுரத்து இருக்கும் சிற்பிகளில் கொம்மண்டை நயினான் முதலியான சிற்பப்புரந்தரன்' என்று குறிப்பிடப்படுகின்றார்.
முதலி என்ற பெயர் இவரது குழுவில் இவரது தலைமைத் தன்மையும், சிறப்பு கருதியும் அளிக்கப்பெற்ற பெயராக இருக்கலாம்.
கல்லில் தொழில் செய்வதில் வல்லவனாக விளங்கியமையால் சிற்பப்புரத்தரன் என்ற பெயரும் பெற்றிருக்கின்றார்.
▪︎ தம்பிரான் குட்டி:
இச்சிற்பியும் கொம்மண்டை நயினானைப் போன்றே முதலி என்ற பெயரும் சிற்பப்புரந்தரன் என்ற பெயரும் பெற்று விளங்கியிருக்கின்றார்.
பொ.பி 1558-ல் ஆதித்ய வர்மனின் ஆணை ஒன்றினை கரிய மாணிக்கபுரத்தில் கல்வெட்டாக பொறித்திருப்பதை விவரிக்கின்றது. அங்குள்ள கல்வெட்டொன்றில் இவர்,
'கோட்டாறான மும்முடிச் சோழபுரத்தில் இருக்கும் சிற்பாச்சாரிமாரில் முதலியான தம்பிரான்குட்டி சிற்பப்புரந்தரன்' என்று குறிப்பிடப்படுகின்றார்.
மேலே கண்ட செய்திகளைக் கொண்டு, கோட்டாறு
பொ.பி 16-ம் நூற்றாண்டில் கற்சிற்பிகள் பலர் குழுவாக சேர்ந்து வாழ்ந்த இடமாக விளங்கியுள்ளது.
இதனை மையமாகக் கொண்டு பல பகுதிகளுக்கு சென்று பல பணிகளை இச்சிற்பிகள் ஆற்றியிருக்கின்றனர் என்று அறிய முடிகிறது.
கருத்துரையிடுக