கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைவதையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இது உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
இந்த 3மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல்,மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் கடந்த 2 மாதங்களாக களைகட்டியது. இந்த கோடை விடுமுறை சீசன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
கருத்துரையிடுக