காவல் அதிகாரியான உதயநிதி ஸ்டாலின் பணிமாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார். அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். மூன்றாவது சிறுமி என்ன ஆனார் என்று தெரியவில்லை.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்குகிறார். ஆனால் அவரை சுற்றியிருக்கும் காவல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அந்த வழக்கை விசாரிக்க விடாமல் சூழ்ச்சி செய்கிறார்கள்.
இந்த சூழ்ச்சிகளை தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததா? மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
காவல்துறை அதிகாரியாக வரும் உதயநிதி ஸ்டாலின் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். உதயநிதிக்கு இது 12-வது படம். திரைத்துறைக்கு வந்த 10 ஆண்டுகளில் சமூக நீதி பேசும் ஒரு படத்தில் கச்சிதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். கதாநாயகியாக வரும் தாண்யா ஒருசில காட்சிகள் மட்டுமே வருகிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் மிரட்டி உள்ளார். ஆரி, இளவரசு மற்றும் மயில்சாமியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
பெரியார் அம்பேத்கர் குறித்த வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களை சாடியிருக்கிறார்கள்; அதற்காகவே உதயநிதியை பாராட்டலாம்.
பல மர்ம கொலைகளை போலீசார் எப்படி தற்கொலையாக சித்தரிக்கின்றனர் என ஏகப்பட்ட விஷயங்கள் படம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களும் சமம். ஆணவத்தால் இனி ஒரு கொலை கூட நடக்க கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்.
திபு நினன் தாமஸின் இசை மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் நெஞ்சுக்கு நீதி – விறுவிறுப்பு
RATING : 4/5
கருத்துரையிடுக