நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேப்பமூடு பூங்கா
நாகர்கோவில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பூங்கா திகழ்கிறது. இங்கு காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவே விடுமுறை தினம் எனில் ஏராளமான பொதுமக்கள் பூங்காவில் குவிவார்கள்.
இந்த பூங்காவில் பொதுமக்களை கவரும் வகையில் டைனோசர் சிலை, வண்ண ஓவியங்கள், அலங்கார செடிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஏராளமாக உள்ளன. அதோடு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட மிக்-21 ரக பயிற்சி போர் விமானமும் பூங்காவை அலங்கரிக்கிறது. இந்த விமானம் முன் நின்று இளைஞர்களும், இளம்பெண்களும் ‘செல்பி’ எடுத்து மகிழ்வார்கள். மேலும் அங்கு கார் பார்க்கிங் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங்கும் உள்ளது.
மேம்பாட்டு பணிகள்
இந்த நிலையில் மாநகராட்சி பூங்காவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அங்கு உடைந்து காணப்பட்ட சிற்பங்களை சீரமைப்பது, டைனோசர் சிலைக்கு வண்ணம் பூசுவது, குழந்தைகளை கவரும் விதமாக அதிகளவில் விளையாட்டு உபகரணங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதோடு மிக்-21 போர் விமானமும் புதுப்பொழிவு பெற உள்ளது. இதன் மூலம் பூங்காவுக்கு கூடுதலாக பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் மாநகராட்சி பகுதியில் புதிதாக 8 சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துரையிடுக