கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமானது.
சுற்றுலா தலம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று காலையில் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரிய உதயம் பார்ப்பதற்காக கடற்கரையில் திரண்டனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் சரியாக தெரியவில்லை. இதனால் சூரிய உதயம் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
படகு போக்குவரத்து தாமதம்
இந்தநிலையில் நேற்று காலையில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், படகுதுறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். தொடர்ந்து 11 மணியளவில் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு களித்தனர்.
கடந்த சில நாட்களாக காலையில் கடல்நீர் மட்டம் உள்வாங்கி காணப்படுவதும், நேரம் செல்ல செல்ல கடல்நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக காணப்படுகிறது. மேலும் கடலில் நீர்மட்டம் ஏறும் போது அலையும் அதிகமாக காணப்படுகிறது.
கருத்துரையிடுக