நாகர்கோவில் கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தற்போது கல்லூரியில் பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா உள்ளிட்ட ஐம்பெரு விழா நடந்தது. தொடர்ந்து விழா கொண்டாடப்பட்டதால் மாணவ-மாணவிகள் விழா நடைபெறும் நாட்கள் மட்டும் சீருடைக்கு பதிலாக வண்ண உடை அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது
இந்த நிலையில் விழாக்கள் முடிந்ததைத் தொடர்ந்து நேற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் சீருடைக்கு பதிலாக வண்ண உடை அணிந்து வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி நுழைவு வாயிலிலேயே நின்று தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும் கல்லூரிக்குள் தங்களை அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது கோஷங்களும் எழுப்பப்பட்டது.
அடையாள அட்டை
இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மாணவர்கள் அடையாள அட்டையை காட்டி கல்லூரிக்குள் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன் பின்னர் மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிவிட்டு கல்லூரிக்குள் சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துரையிடுக